››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 11/21/2014 6:04:00 PM பெருமையுடன் வாழக்கூடிய நாட்டை எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்க வேண்டும்

பெருமையுடன் வாழக்கூடிய நாட்டை எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்க வேண்டும்

கட்டாரில் பணியாற்றும் இலங்கையரிடம் ஜனாதிபதி

அமைதியும் சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த பெருமையுடன் வாழக்கூடிய நாட்டை எதிர்கால பரம்பரைக்காக உருவாக்கிக் கொடுப்பதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஜனாதிபதி; நாட்டின் அபிவிருத்தியில் தத்தமது பங்களிப்பு பற்றி சகலரும் சிந்திக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.

கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அவர்கள் அங்கு திரண்டிருந்த இலங்கையர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களது சுக துக்கங்களை விசாரித்து அறிந்துகொண்டதுடன், இலங்கையிலிருந்து ஜனாதிபதியுடன் சென்றிருந்த அமைச்சர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த ஒன்றரை இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் கட்டாரில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சிறந்த சேவையும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கதென அந்நாட்டு முக்கியஸ்தர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரின் விரைவான அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கி நிர்மாணத்துறையில் பாரிய சேவையை வழங்கும் ‘கட்டார் டியார்’ நிறுவனத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார்.

அவருடன் அமைச்சர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவும் உடன் சென்றுள்ளது. கடந்த சில வருடங்களில் கட்டார் நிர்மாணத் துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான முகாமைத்துவப் பணிகள் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினருக்குத் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை; 2022இல் உலக கால்பந்து விளையாட்டுப் போட்டி கட்டாரில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான பத்து வருட செயற்றிட்டம் பற்றியும் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளார்.

நிர்மாணத் துறையில் பெயர்பெற்ற மற்றுமொரு பிரபல நிறுவனமான ‘பேர்ள் கட்டார் ‘நிறுவனத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்