››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

G7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

G7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

[2016/05/25]

ஜப்பானில் நடைபெறும் G7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளை ஜப்பான் பயணமாகிறார்.

G7 மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜப்பான் பிரதமர் சிங்சோ அபே அவர்களின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்வதோடு, G7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை நாட்டின் அரச தலைவர் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு இம்மாதம் 26,27 ஆம் திகதிகளில் ஜப்பான் நாட்டின் சிசாகி நகரத்தில் நடைபெறுகிறது.

சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முறை G7 மாநாடு நடைபெறுகின்றது.

சம்பிரதாயபூர்வமான G7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக பூகோல பொருளாதாரம் வெளிநாட்டுக்கொள்கை, தேசிய பாதுகாப்பு, பூகோல சுகாதாரம், பெண்களை வலுவூட்டுதல் ஆகிய விடயங்களுக்கு இம்மாநாட்டின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

உலக எண்ணெய் பிரச்சினையின் பெரும் தாக்கங்களின் அடிப்படையில் G7 மாநாடு 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப்பகுதியில் தாபிக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு உலக எண்ணெய் பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில் முக்கிய எண்ணெய் நுகர்வு நாடுகளான கைத்தொழில் துறையில் முன்னணிவகிக்கும் நாடுகள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமென அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி ஜிஸ்காத் தொஸ்தே அவர்கள் 1975 ஆம் ஆண்டு பரிஸ் நகரத்தில் கைத்தொழில் நாடுகளின் கூட்டமொன்றைக்கூட்டினார்.

பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய பாரிய கைத்தொழில் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அக்கூட்டத்தின்போது G6 குழுவை அமைத்தனர். 1976 ஆம் ஆண்டு கனடாவும் இவ்வணியில் இணைந்து கொண்டதுடன் அது G7 என அழைக்கப்படலானது.

1997 ஆம் ஆண்டு ரஷ்யாவும் இந்த அமைப்பில் இணைந்து G8 மாநாடு உருவானபோதும் 2014 ஆம் ஆண்டில் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு மீண்டும் G7 என்று அழைக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய உறுப்பு நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி. பிரித்தானியா. கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலக சொத்துக்களில் நூற்றுக்கு அறுபது வீதமானவை இந்த ஏழு நாடுகளுக்கும் உரித்தாகவுள்ளதுடன், உலகின் மொத்த உற்பத்தியில் 46 வீதமான உற்பத்திகள் இந்த நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

G7 உறுப்பு நாடு அல்லது ஒரு நாட்டுக்கு அவர்களது தலைவர்கள் மாநாட்டின் அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான பெறுமதியான ஓரு சந்தர்ப்பம் என்பதுடன், அதன் உச்ச பயனைப் பெற்று பலம்மிக்க ஏழு அரச தலைவர்களின் முன்னிலையில் எமது நாட்டின் பிரதிமையை எடுத்துச் செல்லவும் இந்நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான உச்ச பயனைப்பெற்றுக்கொள்வதற்கும் ஜனாதிபதி அவர்களுக்கு இந்த விஜயம் பயனுள்ளதாக அமையும்.

ஜனாதிபதி அவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த உத்தியோகபூர்வ அழைப்பு சர்வதேச சமூகம் இலங்கை மீது வைத்துள்ள அதன் கௌரவத்தையும் நம்பிக்கையையும் நாட்டின் முன்னேற்றப்பயணத்தை அவர்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்த்திருப்பதையும் எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்