››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் இந்திய அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் இந்திய அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு கலந்துரையாடல்

[2016/09/21]

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் இன்று (செப் 20) ஆரம்பமான பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

ஐநாவின் பொதுச் செயலாளராக தனது இறுதி உரையியை நிகழ்த்திய பான் கீ மூன் அவர்கள் ருவண்டா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இடம்பெற்றவரும் முக்கிய விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்கள் தொடர்பிலும் மூன் அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதியாக பரக் ஒபாமா அவர்களும் தனது இறுதி உரையினை ஐநா பொதுச்சபையில் நிகழ்த்தியிருந்தார். உலகலாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையா கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி, இவ் அச்சுறுத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்தார். மனிதப் பிரச்சனையாக இதனை கருதி அதனடிப்படையில் செயற்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேண்புல் (Malcolm Turnbull) அவர்களுக்குமிடையில் இன்று (செப் 20) ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். இதேவேளை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், அவுஸ்திரேலிய அரசாங்கமானது மிகுந்த வெளிப்படையான மனிதாபிமான கொள்கைகளை கொண்டுள்ளது எனவும் உண்மையான குடியேற்றவாசிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும் சில குற்றவாளிக் குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலை அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது முழுப் பிராந்தியத்திற்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பர் (M.J.Akbar) அவர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். அண்மையில் கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையினால் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்திலுள்ள அனைவரும் இவ்வாறான வன்முறைகளை இல்லதொழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை அச்சம்பவம் ஏற்படுவதற்கு காரணமான நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு அமைச்சர் அவர்கள் விளக்கமளித்தார்.

அவ்வாறான சிக்கலான நிலைமைகளில் மிகுந்த பொறுமையாகவும் கலந்துரையாடல்களுடாகவும் அவற்றை அணுகுவதன் மூலமே சாத்தியமான தீர்வுகளை இவ்வாறான பிரச்சனைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அவர்கள், அத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை முன்னெடுக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தான் தொடர்ச்சியாக ஆராய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ் இருதரப்பு சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு அரசாங்கங்களும் மனிதாபிமான முறையில் இப்பிரச்சினையை பார்க்கவேண்டும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோதமாக எல்லைதாண்டும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை சாத்தியமான வழிகளில் விரைவாக விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை எல்லைதாண்டி மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வடக்கின் மீனவர்களும் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். ஆகவே மீனவ சமூகத்தினரை உள்ளடக்கி இப்பிரச்சனைக்கான ஆரம்பத் தீர்வுகளை விரைவாக் கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு மத்திய அரசின் உதவியினை அவர் வலியுறுத்தினார்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்