››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை

[2016/09/22]

இனிய மாலை வந்தனங்கள், உங்கள் அனைவருக்கும் இறைவனின் நல்லாசிகள்.

ஐக்கிய நாடுகளின் 71ஆவது மாநாட்டில் இலங்கையின் ஜனாதிபதி என்ற ரீதியில் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் ஒரு மாற்றத்திற்கான ஒரு யுகத்தை ஆரம்பித்துவைத்து கடந்த சுமார் 20 மாதங்களுக்குள் நாட்டுக்குத் தேவையான அரசியல், பொருளாதார மறுசீரமைப்பிற்கு நாம் முன்னுரிமையளித்து செயற்பட்டுள்ளோம்.

விசேடமாக எனது அரசாங்கம் பதவியேற்க முன்னர் இலங்கை மக்கள் அச்சம் மற்றும் பீதியில் வாழ்ந்த ஒரு பின்னணியினை அகற்றி மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ரீதியிலான சமூக மொன்றில் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்கி நாம் இந் நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளோம்.

எனது அரசாங்கத்தின் நோக்கம் உலகில் மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடுகளுள் ஒன்றாக இலங்கையை மாற்றுவதாகும். அதற்காக சுதந்திரம் மற்றும் ஜனநாகத்தை உறுதிசெய்வதனூடாகவும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதனூடாகவும் உலகின் பலம் பொருந்திய சிறந்த மக்களாக இலங்கை மக்களை மாற்றுவது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமும் அபிலாசையும் ஆகும்.

வறுமை, இன்று முழு உலகினையும் ஆட்டிப் படைக்குடம் ஒரு சவாலாக மாறி உள்ளமையால் இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டை நாம் பெயரிட்டுள்ளோம். அதற்கமைய பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு நான் முன்னுரிமையளித்துள்ளேன்.

முக்கியமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடனும் ஏனைய நாடுகளுடனும் நான் நடவடிக்கை மேற்கொள்ளும் போது நிலையான அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து சமூகத்திற்கும் நாட்டுக்கும் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கே பாடுபடுகின்றேன். அதன் போது பிரதானமாக தேவையான பொருளாதார வெற்றியை அடைந்துகொள்வதற்கு நாம் எப்போதும் முன்னுரிமையளித்துள்ளோம்.

சூழல் பாதுகாப்பு போன்றே ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் அறிமுகஞ் செய்துவைத்த பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட இணக்கபாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்டு பிரதானமாக எமக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களுடன் நாட்டின் பரிவர்த்தனை யுகத்தில் சகல துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

கல்வியறிவுள்ள இளைஞர் சமுதாயத்திற்காக அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார கொள்கைகளினூடாக புத்தாக்க பொருளாதாரம் போன்றே பசுமைப் பொருளாதாரத்தினூடாக இலங்கை சமூகத்தில் புதிய திட்டங்களை இலக்காகக் கொண்ட தேசிய அபிவிருத்தியின் முக்கியத்துவத்தினை நாம் இனங்கண்டுள்ளோம்.

கௌரவ தலைவர் அவர்களே, நண்பர்களே,

ஒரு தீவாக அமையப் பெற்ற எமது நாட்டில் காணப்படும் கடல் வளத்தினையும் கடல் வளத்தினால் உழைத்துக்கொள்ளக் கூடிய வளங்கள் மற்றும் அருட்கொடைகளுக்கு முன்னுரிமையளித்து சுற்றுலாக் கைத்தொழில், மீன்பிடிக் கைத்தொழில் ஆகியவற்றை அண்டிய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.
நாட்டின் இலவச சுகாதார சேவை, இலவசக் கல்வி மற்றும் புதிய அறிவுடன் கூடிய விவசாய அபிவிருத்தி, உள்நாட்டு கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் தேசிய கைத்தொழில்மயமாக்கல் ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்டு மக்களுக்கு கூடுதலான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

கௌரவ தலைவர் அவர்களே, இன்று உலகின் பல நாடுகளில் சர்வதேச ரீதியாக யுத்தத்தின் பல்வேறுபட்ட தன்மைகள் சிலபோது மிகக் கொடூரமான நிலைமைகள் போன்றே ஒற்றுமையின்மை, வெறுப்பு மற்றும் குரோதம் என்பன புரையோடிப் போன சமூகங்களை நாம் காண்கின்றோம்.

அங்கு மனித சமுதாயத்திற்குத் தேவையான பண்பாடு பாரதூரமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது. சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல்வேறுபட்ட மோதல்களின் போது பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் பணிக்கு சகல நாடுகளும் முன்னுரிமையளிக்கவேண்டுமென நான் நம்புகிறேன்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்றவகையில் தேரவாத பௌத்த சிந்தனையின் அடிப்படையில் இன்று உலகில் நிலவும் பலபிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்பதை நான் உணர்கின்றேன்.

கிரிஸ்தவமதம், இஸ்லாம் மதம் போன்றே இந்துமதம் உள்ளிட்ட ஏனைய மதங்களின் ஆன்மீக சிந்தனைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக அனைத்து நாடுகளதும் ஆசீர்வாதம் அவசியமாகவுள்ள யுகமாக நான் இதைக் கருதுகின்றேன். தேவையான இம் மாற்றங்களை மேற்கொள்ளும் வேளை இலங்கை போன்றே உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பாரதூரமான ஒரு பிரச்சினை பற்றி மதிப்பிற்குரிய ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன். ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அனர்த்தத்திற்கும் அவலத்திற்கும் ஆளாக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே அதுவாகும்.

இந்த மாநாடு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது ஆரம்பமாக உரையாற்றிய பிரசல்ஸ் ஜனாதிபதி அவர்கள் இது பற்றி விளக்கினார். அவரது கருத்துக்களுக்கு நானும் இணக்கம் தெரிவித்து சமூக ரீதியாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமுதாயம் மற்றும் அனைத்து மக்களும் பாரதூரமானதொரு அனர்த்தத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் இப் போதைப்பொருள் பிரச்சினையை சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இல்லாதொழித்தல், முறியடித்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து தற்போதுள்ளதை விடவும் முறையான மற்றும் பலமான ஒரு வேலைத்திட்டத்தின் தேவைப்பாட்டை நாம் வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறே நாம் எப்போதும் சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது இவ்விடயங்கள் பற்றி முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

எனது அரசாங்கம் ஜனநாயகம், சுதந்திரம், நல்லாட்சி மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை உறுதிசெய்வதற்குத் தேவையான பல்வேறு படிமுறைகளின் நன்னோக்கமுடைய பரிவர்த்தனை மூலம் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி மீண்டும் எனது நாட்டில் யுத்தம் உருவாவதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டுள்ளதென நான் மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போது சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் எனது நாட்டில் யுத்தம் உருவாவதைத் தடுத்தல், நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக பலமான ஓர் அடிப்படையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக எனது நாட்டை முன்னிலைவகிக்கக் கூடிய ஒரு நாடாக மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

இங்குஅறிமுகப்படுத்தப்படும் புதியஅரசியல் மறுசீரமைப்பினூடாக எனது நாட்டைப் போன்றே உலகின் அனைத்து நாடுகளும் தனக்கே உரித்தான சுதேசிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு என்பவற்றுடன் சமூக ஜனநாயக ரீதியிலான ஓர் அரசியல் பயணத்தை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இங்கு ஏற்புடைய அனுகூலமான முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மறுசீரமைப்பிற்காக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கருத்தாடல் என்பன எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பணியின் போது முக்கிய காரணிகளாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

சுமார் 30 அண்டுகளாக யுத்தத்தை எதிர்கொண்ட நாம் எப்போதும் தேசிய நல்லிணக்கததை பலப்படுத்தி புத்திசாதுர்யமாகவும் அறிவுபூர்வமாகவும் ஆரவாரமின்றி அமைதியாக பயணம் செய்தோம். உன்னத இலங்கைத் தாய் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அவ்வாறு பயணித்த நான் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

பிரதானமாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் நிறைவேற்றுச் சபை இலங்கைக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கிய ஒத்துழைப்பினை நான் மிகவும் போற்றுகின்றேன்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சர்வதேச ரீதியிலான சேவைகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுஎன்பவற்றைப் பலப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் மனித சமூகத்திற்கும் தேவையான விரிவான அபிவிருத்திச் செயன்முறைகளை நிறைவேற்றுவதற்கும் அவர் ஆற்றிய சேவையை நான் பாராட்டுகின்றேன்.

இறுதியாக எனது நாட்டை அதாவது இலங்கைத் திருநாட்டை உலகின் தலைசிறந்த ஒரு நாடாக மாற்றுவதற்கும் புதியதலைமுறையினரை நவீன அறிவியலில் சிறந்தவர்களாக மாற்றுவதற்கும் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் போது நாம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியான ஒரு நாடாக சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியிலுமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி எனது அரசாங்கத்தின் பொறுப்பினை எப்போதும் நிறைவேற்றுவேன் எனக் கூறி அதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைபினையும் ஆசீர்வாதத்தையும் நல்குமாறு மிக கௌரவமாக வேண்டிக்கொண்டு எனது உரையை பூர்த்திசெய்கின்றேன்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்