››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

[2016/11/30]

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள், உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பொதுமன்னிப்புக் காலம் தொடர்பான அறிவிப்பை நேற்று (நவம்பர். 29) பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் வெளியிட்டார்.

இப் பொதுமன்னிப்புக் காலம் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம்31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். இதன்போது முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள் தமது சேவை தலைமையகத்திற்கு அல்லது தான் சார்ந்த படைப்பிரிவிற்கு (ரெஜிமென்ட்) சமூகமளிக்குமாறு வேண்டப்படுவதுடன் இவ்வாறு சமூகமளிக்கும் படைவீரர்கள் எதுவித தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுதலோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படவோ மாட்டார்கள். அவர்கள் சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக விலகிச் செல்ல முடியும்.

முன்பு அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தினை பயன்படுத்தி படையினர் பலர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர். இவ்வாறு சந்தர்பத்தை பயன்படுத்தத் தவறிய படை வீரர்களுக்காக மீண்டுமொரு சந்தர்பம் அளிக்கபட்டுள்ளது. இதுவரை இராணுவத்திலிருந்து 174 இராணுவ அதிகாரிகள் மற்றும் 42,506 வீரர்களும், கடற்படையிலிருந்து 26 கடற்படை அதிகாரிகள் மற்றும் 6133 வீரர்களும், விமானப் படையிலிருந்து 37 விமானப் படை அதிகாரிகள் 2806 மற்றும் வீரர்களும் படையிலிருந்து தப்பிச் சென்றவர்களாக அல்லது உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காதவர்களாக கருதப்படுகின்றனர். உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றிய இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை வீரர்கள் விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் தங்களது ஆவணங்கள் சகிதம் வருகை தருமாறு வேண்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவ ஜெனரல்களின் உதவியதிகாரி மேஜர் ஜெனரல் சேனக விக்ரமரத்ன, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம, கடற்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சிசிர ஜயக்கொடி, விமானப்படையின் நிருவாகப் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சந்தன வெலிகல, பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்