››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

[2017/02/02]

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவையும் வாட்டுத் தொகுதியையும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (01) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து குறைபாடுகளும் முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவ்விமர்சனங்களை சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைத் துண்டாடாத வகையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியில் 514 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வாட்டுத் தொகுதியுடனான புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, வாட்டுத் தொகுதிக்கு முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பதிவுசெய்யும் நடவடிக்கையையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் உட்பட மாகாணத்தின் சுகாதாரத் துறை முன்னேற்றத்திற்காக பாடுபடும் அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் விருதுகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவர் ஒருவரினால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் ஓவியம் அம்மாணவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண அமைச்சர் ஆரயவதி கலப்பத்தி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்