››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கின் அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி

வடக்கின் அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி

[2017/03/04]

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பல புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை வட மாகாணத்திற்கு வருகை தந்து தனது அமைச்சின் கீழ் நடைபெறும் அபிவிருத்தி பணிகள் குறித்து கண்டறியுமாறு சகல அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பான கால அட்டவணை ஒன்றை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கான ஆலோசனையை வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (04) ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப் புதிய செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினைகளை தம்மிடம் முன்வைப்பது இலகுவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சகல மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து சகலரும் ஒன்றிணைந்தே நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உரிய பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் வட மாகாணத்திற்கு வருகை தந்து அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்து கண்டறியவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தமது தொழில்வாய்ப்புக்களுக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் குறித்து இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அவ்வாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தாது இன்றைய தினம் அவர்கள் தம்மை சந்திக்க வந்திருப்பின் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.

எதிர்ப்பு உபவாசம், மற்றும் போராட்டங்கள் என்பன மிகவும் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றேல் அவை வலுவிழந்து விடும் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தற்போதைய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இன்று வடக்கிலும் தெற்கிலும் சில சக்திகள் ஒரே மாதிரியாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 08 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் மக்களின் மனங்கள் ஒன்றுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தற்போதைய அரசின் அனைத்து முயற்சிகளும் அனைத்து மக்களினதும் மனங்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவண்ணம் சகல மக்களுக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கேயாகும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஒருவருட நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் 2016 ஜனவரி 08ஆம் திகதி ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் சேவை வழங்கும் நடைமுறையை வலுப்படுத்தி மக்களி்ன் பிரச்சினைகள், குறைகள் மற்றும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதும், அவற்றிற்கான பதில்களையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதும் அச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

1919 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அரச தகவல் மையத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ, http://tel.president.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது tell@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்வதனூடாகவோ அல்லது தபால் பெட்டி இலக்கம் 123, கொழும்பு எனும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ ஜனாதிபதி செயலகத்திற்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை முன்வைக்கும் வாய்ப்பு ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவினால் பரீட்சிக்கப்பட்டு குறிப்பிட்ட முறைப்பாடுகள் மற்றும் குறைகள் பற்றிய மேலதிக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டிய அமைச்சிற்கு அல்லது அவை நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.

தற்போது ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 109,826 ஆகும். அவற்றுள் 35,999 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 58,273 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. 9,771 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்படவுள்ளன.

வட மாகாண மக்களுக்கு தமது குறைகள், முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இன்று திறந்து வைக்கப்பட்ட புதிய அலுவலகத்திற்கு வருகைதந்து சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்திற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் அங்கேயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

புதிய அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதன் பணிகளையும் அவதானித்தார்.

கீரிமலை மற்றும் வளலாய் பிரதேசங்களில் காணிகளை விடுவித்து வழங்கியதன் பின்னர் அங்கு நிர்மாணிக்கப்பட்ட 10 வீடுகளின் சாவிகளையும் ஜனாதிபதி அவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்தார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க, துமிந்த திசாநாயக்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்