››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

14வது ஐ.நா. சர்வதேச வெசாக் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பம்

14வது ஐ.நா. சர்வதேச வெசாக் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பம்

[2017/05/12]

14வது ஐ.நா. சர்வதேச வெசாக் வைபவத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (மே,12) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வரவேற்றனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.
இவ்வருடத்திற்கான வெசாக் வைபவம் “ "சமூக நீதி மற்றும் நிலையான சமாதானத்திற்கான புத்தமத போதனைகள்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

குறித்த இந்நிகழ்வில் சமய ஆராதனை நிகழ்வுகள் யாவும் மல்வத்து பீடத்தின் தலைமை விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அவர்களினால் நிகழ்த்தப்பட சமய அனுசாசனம் அஸ்கிரிய பீடத்தின் தலைமை விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ ஞானரத்ன தேரர் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கௌரவ. விஜேதாச ராஜபக்ச அவர்கள் வருகை தந்த அதிதிகள் அனைவரையும் வரவேற்ற அதேவேளை, வெசாக் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பௌத்த மத போதனைகள் எனும் தலைப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உரை நிகழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், தேரவாத பௌத்த மதம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இடம்பெறுகின்ற சமூக, பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் என அனைத்துக்கும் தீர்வினைப் பெற்றுத்தருகின்றது எனவும் மத போதனைகளை போதிக்கும் மத போதகர்கள் மதத்தினால் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், ஐ. நா. வெசாக் தின பெயரிடலானது சர்வதேச அரங்கில் பௌத்த மத போதனைகளின் ஈர்ப்பினை ஏற்படுத்துவதற்கு பேருதவியாக அமைந்தது என தெரிவித்ததுடன் அமைதியான சமூகமாக திகழ பௌத்த மதம் வழிகாட்டுகின்றது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் இந்நிகழ்விற்கு வருகை தந்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் மகா சங்கநாயக்க தேரர்களுக்கும் தனது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு மகா சங்க பிரதிநிதிகள், ஏனைய சமய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர்,அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்