››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

[2017/05/23]

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய போதனா வைத்தியசாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (21) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

வேரஹெர பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலை, 20 விசேட சிகிச்சை நிலையங்கள், 814 கட்டில்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் கொண்ட முழு நிறைவான சர்வதேச தரம்வாய்ந்த வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையை திறந்துவைத்த ஜனாதிபதி, அங்குள்ள சிகிச்சை நிலையங்களை பார்வையிட்டதுடன், சிறுவர் வாட்டுக்கள் மற்றும் விசேட விருந்தினர் வாட்டுக்கள் தொகுதியையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டு மக்களின் இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையவும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இச்சேவையில் உள்ளவர்களில் வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அப்படி வெளிநாடுகளுக்குச் செல்வோரை தடுத்து வைத்துக்கொள்வதற்கான வழிகள் இல்லை என்ற போதும் மக்களுக்கு இலவச சுகாதார சேவை மற்றும் இலவச கல்வியின் நன்மைகளை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அத்மிரால் ஜே.ஜே. ரணசிங்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் அத்மிரால் தயா சந்தகிரி, உபவேந்தர் ரியர் அத்மிரால் ஜே.ஜே. ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி_ ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்