››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

[2017/05/30]

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் இதன்போது விடயங்களைக் கண்டறிந்த ஜனாதிபதி அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் நிதி உதவிகள் அவசியமாயின் உடனடியாக தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், விசேடமாக படகுகளினால் அண்மிக்க முடியாத உயிர் அச்சுறுத்தல் உடைய பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.

தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் மற்றும் ஆடையணிகள் தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணித்து அவற்றைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக விசாரித்து அறிந்த ஜனாதிபதி அவர்கள், நீர் வழிந்தோடியதன் பின்னர் மக்களின் வசிப்பிடங்களையும், கிணறுகளையும் சுத்தம் செய்வதற்காக பின்பற்றவுள்ள முறை தொடர்பாகவும் விசாரித்தார்.

அதேபோல் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை மீண்டும் உறுதி செய்வதற்கும் சலுகை ரீதியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பல உலக நாடுகள் முன் வந்துள்ளதுடன், இந்தியாவிலிருந்து இரு நிவாரணக் கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சர்வதேசத்தில் அனைவரது ஒத்துழைப்புடன் அனர்த்தத்திற்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றுமெனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

அமைச்சர்களான டப்ளியு.டி.ஜே.செனெவிரத்ன, தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நன்றி_ ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்