››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியேற்பு

புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியேற்பு

[2017/07/06]

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தமது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுலை, 06) இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திருமதி வைத்தியரத்னவும் கலந்து சிறப்பித்தார்.

அமைச்சின் வளாகத்திற்கு வருகை தந்த திரு. வைத்தியரத்ன அவர்களை சம்பிரதாய பூர்வமாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. பண்டிதரத்ன அவர்கள் வரவேற்றார். பின்னர் தமது பணியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மகா சங்க நாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் தமது கன்னி உரையாற்றிய அவர், முதலில் முக்கியத்துவம் மிக்க இப்பதவி நிலைக்கு தம்மை நியமித்த ஜனாதிபதிக்கு தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன் நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் சேவையாற்றுவதற்கு தாம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பிற்கான பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் நலன்புரி சேமலாப நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் என்பனவற்றில் தாம் ஈடுபடவுள்ளமை தமது கௌரவமாக எடுத்துக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

அரசினால் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதன நடவடிக்கைகளுக்கு தாம் தொடர்ந்து தமது பங்களிப்பினை வழங்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர் நாட்டுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தவிர்க்க முடியாதவை எனவும் அவற்றை வெற்றிகொள்ளும் பொறிமுறைகள் வகுக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர், இத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்க அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாதுகாப்பு அமைச்சின் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்திய அவர் அவற்றை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். நீதித்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர் நிலையான சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், கூட்டுப்படைகளின் பிரதானி, இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், கடற்படை அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் மதிப்பு மிக்க பழைய மாணவராவார். 1983ஆம் ஆண்டு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் இணைந்து கொண்ட அவர் 2005ஆம் ஆண்டு முதல் பிரதி சொலிசிட்ட ஜெனரலாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

     
     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்