››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு கடற்படை கப்பல்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு கடற்படை கப்பல்

[2017/09/06]

இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று, இந்திய அரசினால் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (செப்டம்பர், 05) கையளிக்கப்பட்டது. இவ்வுத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்றதக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் ராஜேந்திர சிங் அவர்களால் இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்களிடம் உத்தியோக பூர்வமாக குறித்த கப்பல் கையளிக்கப்பட்டது.

74.10 மீட்டர் நீளம் மற்றும் 11.4 மீட்டர் அகலம் கொன்டுள்ள இக் கப்பல் 1180 டொன் கொள்ளளவுடையது. மேலும் இக்கப்பல் 22 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவுள்ளதுடன் சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் 16 நொட் வேகத்தில் பயணிக்ககூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. 8.500 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பலில் இலகுரக உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக ஹெலிகொப்டர் இறங்குதளம் ஒன்றும் காணப்படுகின்றது. அத்துடன் இக் கப்பலில் ஒரேநேரத்தில் 10 கடற்படை அதிகாரிகள் மற்றும் 98 கடற்படை சிப்பாய்கள் தங்குவதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

குறித்த இக்கப்பலினை, இலங்கை கடல் பிராந்திய எல்லைக்குள் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் கடல் பிராந்திய சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதே இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முக்கிய இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குறித்த கப்பல், சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் பூர்த்தியான பின்னர் எதிர்வரும் 14ம் திகதி இந்திய துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சீஜி60 எனும் பெயருடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணையவுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, இந்திய கடலோர பாதுகாப்பு படையின் மேலதிக பணிப்பாளர் நாயகம், திரு. கே நடராஜன், இந்திய தென் பிராந்திய கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் ஆர்.ஜே நட்கானி உள்ளிட்ட இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்