››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிதானமானதும் தெளிவானதுமான பயணத்தின் ஊடாக பொருளாதார சபீட்சத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நிதானமானதும் தெளிவானதுமான பயணத்தின் ஊடாக பொருளாதார சபீட்சத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

[2017/09/20]

நாட்டின் சுயாதீனத் தன்மையையும் இறைமையையும் பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பயணம் மெதுவானது என்றபோதும் தெளிவான வெற்றியை அடைந்துகொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தெரிவித்தார்.

சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆயினும் 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நாட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்புதை குறுகிய காலத்தில் செய்துவிடமுடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இன்று (20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டு நடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமையிலிருந்து விடுபடும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு வரையான தெளிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டத்தை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்தை பலப்படுத்தி வறுமையிலிருந்து விடுபடும் அந்த பாரிய தேசிய செயற்திட்டத்தில் புதிய செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, 2025ஆம் ஆண்டுவரை நாம் அமுல்படுத்த எதிர்பார்க்கும் பொருளாதார திட்டம், நாட்டில் பொருளாதார புத்தெழுச்சியையும் சுபீட்சத்தையும் அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்