››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மருத்துவ வசதிகளைகொண்ட கட்டிடத்தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு

மருத்துவ வசதிகளைகொண்ட கட்டிடத்தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு.

[2017/09/26]

இலங்கை இராணுவத்தினரால் மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதிகள் பொதுமக்கள் பாவனைக்காக அண்மையில் (செப்டம்பர், 24) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தகவல்களின் பிரகாரம், வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை பிராந்திய வைத்திய சாலைகளில் மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் யாழ்ப்பாணம் மரதன்கேணியில் உள்ள பிராந்திய மருதத்துவ அதிகாரிகளுக்கான காரியாலய தொகுதி என்பன சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இப்பிராந்தியத்தின் நீண்டநாள் மருத்துவ தேவையினை கருத்தில்கொண்டு 2016ஆம் ஆண்டு யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பொறுப்பேற்கப்பட்ட வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை ஆகிய வைத்தியசாலைகளின் இரண்டு வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் மரதன்கேணியில் உள்ள பிராந்திய மருதத்துவ அதிகாரிகள் காரியாலய தொகுதியானது இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் யாழ் படைத் தலைமையக இராணுவத்தினர் ஆகியோரின் திறமைகள், நிபுணத்துவம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்காக சுமார் 28.03 மில்லியன் ரூபாவையும், ஊர்காவற்துறை வெளி நோயாளர் பிரிவுக்காக 28.9 ரூபாவையும் மற்றும் RMO அலுவலகத்திற்கு 30.3 மில்லியன் ரூபாவையும் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான உலகளாவிய நிதியம், காசநோய் மற்றும் மலேரியா நோய் தடுப்புக்கான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள தலைமையகம் ஆகியன நிதியுதவியாக வழங்கியுள்ளது. அத்துடன் கட்டிட பணிகள் யாவும் இலங்கை இராணுவத்தின் ஆளணியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை ஆகிய வைத்தியசாலைகளின் குறித்த மருத்துவ வசதிகளைக்கொண்ட விசாலமான வெளிநோயாளர் பிரிவுக்கான தேவையினை தற்போதைய இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் யாழ் கட்டளை தளபதியாக சேவையாற்றும் போது அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர், நன்கொடையாளர் நிறுவன பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்