››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை இராணுவப் படைப்பரிவு தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை இராணுவப் படைப்பரிவு தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

[2017/11/13]

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையில் அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாம்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது படையினரின் நடவடிக்கைகளுக்கு தேவையில்லாத காணிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு மீண்டும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அத்தகைய காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாரஹேன்பிடவில் உள்ள இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கை இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராணுவ கட்டளைத் தளபதிகள், நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான அதிகாரிகள் மத்தியில் ஒரே நேரத்தில் உரையாற்றியது இராணுவ வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படைவீரர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவகையான விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என்பதுடன், படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பான வகையில் அத்தகைய எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் குறித்து சில இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, யுத்தத்தில் ஈடுபட்ட எந்தவொரு படைவீரருக்கும் யுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக குற்றம் சுமத்தப்படவில்லை என்பதுடன், அவ்வாறு குற்றம் சுமத்த தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கும் உடன்பாடில்லாத வகையில் அரசியல்வாதிகளின் தேவைக்காக இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அவ்விடயங்களுடன் தொடர்பற்றவர்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலர் அரசியல் மேடைகளில் குறிப்பிடுவது போன்று படைவீரர்களை குறிவைத்து எந்த நடவடிக்கையும் நாட்டில் இடம்பெறவில்லை என்றும் அத்தகைய கருத்துக்களை தான் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்தில் பாதுகாப்புப் படைவீரர்கள் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, தேசிய அனர்த்தங்கள் ஏற்பட்ட அணைத்து சந்தர்ப்பங்களின் போதும் தமது உயிரை பணயமாக வைத்து செயற்பட்டமைக்காக அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் தமது கௌரவத்தை தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி கொள்கையில் நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்வதற்கு தேசிய நல்லிணக்க கொள்கையின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைதியான சமூகமாகவும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்துடன் முன்னோக்கிச் செல்லும் நாம் நாட்டை அபிவிருத்திசெய்வதற்கு எதிர்காலத்திலும் அனைவருடையவும் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவேணடிய அனைத்து சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருதுடன், எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கும் ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் படையினரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்பேணல் மற்றும் சலுகைகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தனது உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் இராணுவ உறுப்பினர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அவர்களின் இவ்வுரையை அனைத்து பாதுகாப்பு படை தலைமையகங்கள், இராணுவ நிறுவனங்களில் உள்ள 30000 க்கும் மேற்பட்ட இராணுவ உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி/ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்