››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு புதிய அதிவேக ரோந்துப்படகுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைவு

ஜப்பானினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு புதிய அதிவேக ரோந்துப்படகுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைவு

[2018/08/29]

ஜப்பானினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப்படகுகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 29) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது. இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான "சமுத்திர ரக்ஸா" மற்றும் "சமாரக்ஸா" ஆகிய கப்பல்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் அதிகாரமளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ. கசுயூகி நகனே அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்ட அதேவேளை ஜப்பானிய தூதுவர் அதிமேதகு. திரு. கெனிச்சி சுகனுமா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்னஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிரதான அதிதி மற்றும் விஷேட அதிதிகளை இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்கள் வரவேற்றார்.

மேலும் அதிதிகளுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இரு கப்பல்களின் கட்டளைத்தளபதிகளுக்கும் ஆணைப்பத்திரம் அளிக்கப்பட்டு அவர்களினால் அது வாசிக்கப்பட்டன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இரு கப்பல்களினதும் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்த பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து அவற்றினை பார்வையிட்டார். இதன்போது அவர்களுக்கு குறித்த கப்பல்களின் செயற்பாடுகள், அவை கொண்டுள்ள நவீன வசதிகள், உயர் ரக செயற்பாடு திறன் ஆகியன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இலங்கை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கம் கொண்டுள்ள நன்மதிப்பிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர், இரு நாடுகளுக்குக்கிடையில் நிலவும் இறுக்கமான பிணைப்பு தொடர்பாகவும் விவரித்ததுடன் நாட்டின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை வரலாற்றில் மாசு கட்டுப்பாடு மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க கடமைகளுக்காக இரு கப்பல்களை பெற்றுக்கொள்வது இதுவே முதற்தடையாகும் என தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை தீவு அமைந்துள்ளதால் அது இப்பகுதியில் ஒரு பிரதான வகிபாகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் கடல்சார் நடவடிக்கைகளை அதிகரிக்கும் புதிய போட்டித்தன்மையான போக்கு நிலவுவதால் அது இப் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் மூலோபாயப் போட்டிகள் உருவாகி வங்காள விரிகுடாவில் நிலைமைகள் மிகவும் சிக்கலாக மாறுவதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இத்தகைய தருணத்தில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை என்பன கடல் சார் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளன. இந்நிலையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்விரு புதிய கப்பல்களும் இந்நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் எனவும் கடல் சார் சூழலை பாதுகாப்பதற்கு ஜப்பான் அளித்துவரும் உதவிகள் மகத்தானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, விமானப்படைத்தளபதி, கடற்படை அதிகாரிகளின் பிரதானி, தூதரக உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள்,மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

30மீட்டர் நீளமான இவ்விரு கப்பல்களும் டோக்கியோவில் சுமிடகவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கையின் கடல் சார் பாதுகாப்பு திறன் மேம்பாட்டினை அதிகாரிக்கும் வகையில் 2016ம் ஆண்டு ஜூன்மாதம் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இவ்விரு கப்பல்களும் ஜுலை மாதம் 02ம் திகதி கொழும்புக்கு வருகை தந்ததுடன் அதே மாதம் 10ம் திகதி இலங்கை கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்விரு கப்பல்களின் வடிவமைப்பு, நிர்மாணம், விநியோகம் மற்றும் பயிற்றுவைப்பு ஆகியவற்றிற்காக சுமார் 1.83 பில்லியன் யென் செலவிடப்படவுள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. இது இலங்கை ரூபாயில் சுமார் 2.65 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்