››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX' நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX' நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்

[2018/08/29]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இக்களமுனை பயிற்சியில் வெளிநாட்டு இராணுவதத்தினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 100 பேர் உட்பட 2500 இலங்கை இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய் கிழமையன்று (ஆகஸ்ட்,28) கொழும்பில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான பயிற்சி நடவடிக்கைகள், சமச்சீரற்ற போர்க்கள தாக்கத்துடன் கூடிய கிளர்ச்சி சூழ்நிலையை எதிர்கொள்ளல் தொடர்பாக சித்தரிக்கின்றன. இது முக்கியமாக ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, முன்-ஆயத்த பயிற்சி, அதிகாரிகளின் செயல்பாடுகள், நிகழ் நேர பங்களிப்பு மற்றும் கொடுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் சிறப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும்.

பயிற்சி நடவடிக்கைகள், கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் எதிர் வரும் 26 ஆம் திகதி வரை (செப்டம்பர், 2018 ) இடம்பெறவுள்ளன.

செப்டம்பர் மாதம் 6ம் திகதி மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்தில், பயிற்சி தயாரிப்பு தொடர்பான விரிவான கூட்டத்தைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ள களமுனை போர்பயிற்சிகள் அம்மாதம் 26ம் திகதி நிறைவுபெறவுள்ளது.

இப்பயிற்சி நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் அவதானிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இவ்வூடகவியலாளர்கள் சந்திப்பில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி, இராணுவ பயிற்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் , இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, கொமாண்டோ படை கட்டளை தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞானரத்ன, விஷேட படையணி கட்டளை தளபதி கேர்ணல் உபுல் இகலஹே, குரூப் கெப்டன் விஸ்வ சமந்த, கடற்படை கெப்டன் தம்மியன் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்