››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு – ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு – ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தின் பின்னர் தீர்மானம்.

நெருக்கடி ஏற்படும் வகையில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பான விசேட நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய செயற்படுவேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் வருடந்த பொதுச்சபை கூட்டத்தொடரில் இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கை தொடர்பில் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சலுகைகளை பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் கெளரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல் ஆகியன தொடர்பான விடயங்கள் அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் எமது பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை போன்றே கடந்த யுத்த காலத்தில் இருதரப்பினரிடையேயும் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கு அதனூடாக வாய்ப்பு ஏற்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்த முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (14) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களை கடத்துதல், கொலை செய்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாமையினால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், 2015 ஆகஸ்ட் மாதம் முதல் முப்படை அதிகாரிகளும் ஒரு சில விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதுடன், போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதைவிடுத்து அனாவசியமாக அவர்களை சிறையில் தடுத்து வைத்திருப்பதனால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்விடயம் தொடர்பில் தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் கடுமையான பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பலவீனமடையவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். யுத்தமொன்று இல்லாத நாட்டில் இராணுவத்தை பராமரிக்கின்றபோது மீளொழுங்குபடுத்துதல் இடம்பெற்ற போதும் எந்தவொரு பலவீனப்படுத்தும் நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்றும் இன்று எமது பாதுகாப்பு படையினருக்கு கடந்த காலத்தை பார்க்கிலும் உலகின் முக்கிய நாடுகளின் பயிற்சி வாய்ப்புகளும் ஒத்துழைப்புகளும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இன்றும் கூட தேசிய வரவு செலவுத் திட்டத்தில் அதிக தொகை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்து சிலர் முன்வைத்துவரும் பல்வேறு கூற்றுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு அக்கூற்றுக்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

எண்ணெய் விலையுடன் தொடர்புடைய விலை சூத்திரம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விலை சூத்திரத்தை தொடர்ந்தும் பேணுவதா அல்லது தற்போதிருப்பதை பார்க்கிலும் மக்களுக்கு சிறந்த நிலைமையை ஏற்படுத்துவதற்காக தேவையான திருத்தங்களை மேற்கொள்வதா என்பது பற்றி எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நீர்ப்பாசன துறையின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் குளங்களை புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஊடக நிறுவனங்களுக்கு விளக்கமளி்த்தார். இன்று நெல்லுக்கு உயர்ந்த விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஊடக நிறுவனங்களின் போதுமான விளம்பரம் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நெல்லின் விலை அதிகரித்தபோதும் அரசியின் விலை அதிகரிப்பதற்கு இடமளிக்காது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவதாக முல்லைதீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள். கொள்கை ரீதியாக எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் நாட்டின் எந்தவொரு இடத்திலும் குடியேறும் உரிமை உள்ளது எனத் தெரிவித்தார். மாகாண பேதங்களின்றி அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் ஐக்கியத்துடனும் வாழும் நாட்டை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் பிரச்சினைகள் ஏற்படும் வகையில் குடியேற்றங்களை அமைப்பது அரச தலையீட்டுடன் இடம்பெறவில்லை என்றும் எதிர்காலங்களிலும் இவ்வாறு இடம்பெறப்போவதில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பாக விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு தான் நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அதுபற்றிய விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் இது பற்றிய கருத்துக்களை எவருக்கும் முன்வைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த குழுவின் அறிக்கையின் மூலம் இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் இருப்பதாக பரிந்துரை முன்வைக்கப்படுமானால் அதனை நீக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பாரதூரமான நிலைமைகள் குறித்து அறிக்கையிடப்படுமானால் அது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பது உள்ளிட்ட சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கு மக்களை இணைத்துக்கொள்ளும் விளம்பர செயற்திட்டங்களுக்கு உதவுமாறும் ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்யரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

நன்றி:pmdnews.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்