››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

[2018/10/10]

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த “டிட்லி”' என்ற சூறாவளியின் விளைவாக நாட்டில் சீரற்ற காலநிலை நிலவியதுடன், வடமேற்கு திசையில் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் (ஒக்டோபர், 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழைகாரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வளல்லவிடிய, மற்றும் புலத்சிங்கள பகுதிகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, நாகொட, தவலம, ஹினிதும, அவிதவ மற்றும் வாக்வெள்ள பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தின் கடுபொத்த மற்றும் அகுரஸ்ஸ பகுதிகளிலும், கொழும்பு மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்திலும் இலங்கை கடற்படையின் 2 அவசர மீட்பு படகுகள் மற்றும் 11 சிறிய ரக படகுகளுடன் 14 நிவாரண குழுக்கள் செயற்பட்டுவருகின்றனர்.

மேலும், கடற்படை நிவாரண குழுக்களின் துரித நடவடிக்கையினால் தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட இருந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தென் மாகாணத்தின் காலியிலுள்ள அவிதாவ பாலத்தில் அடைத்துள்ள குப்பை கூளங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் ஏற்பட இருந்த வெள்ள அனர்த்தங்களையும் தடுத்துள்ளனர்.

இதேவேளை, இராணுவ வீரர்கள் பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொலமுனு ஓயா அணைக்கட்டில் ஏற்பட்ட பிளவினை தடுப்பதற்காக துரித நிவாரண பணிகளை ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொண்டுள்ளனர். படையினர் இதனை தடுப்பதற்காக மண் மூட்டைகளை இட்டு தடுத்துள்ளனர்.

இராணுவம் மற்றும் கடற்படை நிவாரணக் குழுக்கள் மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு நகர்த்துவதுடன், சமைத்த உணவு குடிநீர் என்பவற்றையும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிமாறி வருகின்றனர். மேலும் அணைக்கட்டுகளில் ஏற்படும் நீர்க்கசிவினையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், பாலங்களில் நீரோட்டத்தை அடைத்துள்ள குப்பை கூலங்களையும் அகற்றும் நிவாரண நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரகாரம் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை சுமார் 71,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை , களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனர்த்த சம்பவங்கள் காரணமாக ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், பதினேழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், சுமார் 2000க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை முதல் சிறிது குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, மத்திய, தெற்கு , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்