››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீஷெல்ஸ் – இலங்கை உறவுகளை, இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு…

சீஷெல்ஸ் – இலங்கை உறவுகளை, இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு…

[2018/10/11]

நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள சீஷெல்ஸுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவினை இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக பலமாக முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ தெரிவித்தார்.

சீஷெல்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பையேற்று இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு சீஷெல்ஸ் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இரவு விருந்துபசாரமொன்று நேற்று (08) இரவு சீஷெல்ஸ் அரச மாளிகையில் இடம்பெற்றது. இந்த விருந்துபசாரத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீஷெல்ஸிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு முப்பது வருடங்கள் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி அவர்களின் சீஷெல்ஸ் விஜயம், இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதோர் மைல்கல்லாக அமைந்துள்ளதென்றும் சீஷெல்ஸ் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பூகோள ரீதியாக இரண்டு நாடுகளுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்தபோதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பு சமமானவை என்று குறிப்பிட்ட சீஷெல்ஸ் ஜனாதிபதி, இரண்டு நாடுகளும் இணைந்து நீண்டதூரம் பயணிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம், கல்வி, சுற்றுலா, சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட சீஷெல்ஸ் ஜனாதிபதி, இதற்காக எதிர்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸிற்குமிடையில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளதுடன் இலங்கையின் சுகாதார சேவைக்கு சீஷெல்ஸ் நாட்டில் அதிக கேள்வி உள்ளதாகவும் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்த சீஷெல்ஸ் ஜனாதிபதி, இதற்காக இலங்கை வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் தீவு நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளும் முகங்கொடுத்துள்ளதுடன், இந்த சவால்களை வெற்றிகொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீஷெல்ஸ் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேநேரம் தற்போது சீஷெல்ஸ் நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் அந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பையும் சீஷெல்ஸ் ஜனாதிபதி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அனைத்து நாடுகளுடனும் நட்புறவை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நவீன வெளிநாட்டு கொள்கையானது, இலங்கை பற்றிய புதிய பிரதிமையையும் கௌரவத்தையும் சர்வதேச மட்டத்தில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பின்புலம் நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்தி நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அனைவரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

இன்று நட்புறவு என்ற நிலையை கடந்து சகோதர பிணைப்பாக மாறியுள்ள சீஷெல்ஸ் – இலங்கை உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் சுபீட்சத்தை கொண்டு வருவது தமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இந்த இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரை சீஷெல்ஸ் ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், இரு நாடுகளினதும் தலைவர்கள் மிகுந்த நட்புறவுடன் இதன்போது கலந்துரையாடினர்.

நன்றி:president.gov.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்