››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

[2019/01/02]

மக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருட்கள் போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்படும் அதேவேளை, அதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று (01) முற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் 2018ஆம் ஆண்டின் முன்னேற்றம் தொடர்பாகவும் 2019ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. பல வருடங்களாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதிருந்த பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டில் 9,615 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த மொத்த நிதியும் முற்றுமுழுதாகவே மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளமையை மாவட்ட செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை ஒழிப்பதற்காக மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அரச நிறுவனங்களில் நிலவும் மனிதவள தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. புதிய பஸ்தரிப்பு நிலையமொன்றை நிர்மாணித்தல், கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நிலவும் சாதகமான காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் செழிப்படைந்துள்ளமையினால், மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்காக “எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தினால் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

மரநடுகை செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் கவனம் செலுத்தியதுடன், மாகாண கல்வி காரியாலயம், மாவட்ட செயலகம் ஆகியன ஒன்றிணைந்து பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

பொலன்னறுவை பொத்குல் விகாரை வளாகத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எட்டு வியாபாரிகளுக்கான வியாபார கூடங்களையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கிவைத்தார்.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பொலன்னறுவை மாவட்டத்தின் 2019ஆம் ஆண்டிற்குரிய புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் பொலன்னறுவை சந்ர மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் கட்சி பேதமின்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், புதிய அபிவிருத்தி முன்மொழிவுகளை ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் பொலன்னறுவையில் உள்ள தனது அலுவலகத்தில் கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சகல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் பணிப்புரை விடுத்தார். அச்செயற்திட்டங்களில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய செயற்திட்டம் எதுவென கண்டறிந்து துரிதமாக அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கட்சி, நிற பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

நன்றி: pmdnews.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்