››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விசேட அறிக்கை

விசேட அறிக்கை

[2019/04/21]

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது. அதன்போது பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் அமர்த்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு நாடு தழுவிய ரீதியில் இன்று மாலை 06 மணி முதல் நாளை காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுரை வழங்கியிருப்பதுடன், பாதுகாப்பு பதவிநிலை பிரதானிகளின் ஆலோசனைகளுக்கமைய இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் குற்றவாளிகளை கண்டறிவதற்குமான சோதனை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய நடவடிக்கை மையம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன், இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு துரித சிகிச்சையளிப்பதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களை அடையாளங் காணும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதுடன், மரண விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் நீதித்துறை உத்தியோகத்தர்களினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரச செலவில் மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் பாதுகாப்பு தரப்பினரால் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதால் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக அனைத்து சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சகல தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து பிரதேசங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் தமது இல்லங்களில் அமைதியாகவும் சமாதானத்தை நிலைநாட்டும் வகையிலும் இருப்பதன் மூலம் பாதுகாப்பு துறையினருக்கு தேவையான ஒத்துழைப்புகளை நல்குமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினர் சேவையில் அமர்த்தப்பட்டிருப்பதுடன், பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முப்படையினர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

உதய ஆர். செனவிரத்ன
ஜனாதிபதியின் செயலாளர்
21.04.2019

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்