மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/15/2017 7:44:18 AM பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களுக்கு மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்க ஜனாதிபதி தீர்மானம

பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களுக்கு மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்க ஜனாதிபதி தீர்மானம

[2017/11/15]

பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களுக்கு மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்க ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்துள்ளதுடன் உரிய அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் உரித்துடைமைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லாத வேறு காரணங்களினால் செயற்பாட்டுப் பிரதேசங்களில் உயிரிழந்த, அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் ஒருங்கிணைப்புக் கடமைகளில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தினையும் கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்தல், அங்கவீனமுற்று இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற இராணுவ வீரர்கள் 55 வயதினைப் பூர்த்தியாகும் போது வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவை 85 சதவீதமாக திருத்தம் செய்கையில் இழக்கப்பட்டுள்ள அங்கவீனர் ஓய்வூதியக் கொடுப்பனவை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், யுத்தத்தின் போது அங்கவீனமுற்று 10/12 வருட சேவைக் காலத்துடன் ஓய்வூதியம் பெற்றுள்ள அல்லது விலகிச் சென்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதியப் பணிக்கொடையினை வழங்க நடவடிக்கை எடுத்தல், தொண்டர் படையணிகளில் சேவை புரிந்து தற்போது ஓய்வூதியம் பெற்றுள்ள அல்லது உயிரிழந்துள்ள இதுவரையில் விதவைகள், ஆதரவற்ற பிள்ளைகள் ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டத்தில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள விருப்பு தெரிவிக்க முடியாது போன ஓய்வூதிய உறுப்பினர்களினதும் உயிரிழந்த உறுப்பினர்களது பயனாளிகளுக்கும் மீண்டும் உறுப்புரிமையை வழங்கி வரப்பிரசாதங்களை பெற்றுக் கொடுத்தல் என்பன எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள வரப்பிரசாதங்களில் சிலவாகும்.

இதனிடையே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முப்படையினருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 2016.01.01 திகதி முதல் 5 படிமுறையின் கீழ் மொத்த சம்பளத்தை உயர்த்துதல், அரச சேவையில் நிறைவேற்றதிகார தரத்திலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவினை 2016.02.03 ஆம் திகதியிலிருந்து லெப்டினன் கெர்ணல் பதவியை விட உயர் பதவிகளை வகிக்கும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கும் பெற்றுக் கொடுத்தல், இலங்கை இராணுவத்தில் சட்டத்தரணிகளாக கடமையாற்றுபவர்களுக்கு 15,000 ரூபா கடமைக் கொடுப்பனவினை 2017.07.01 ஆம் திகதியிலிருந்து வழங்குதல் என்பன அவற்றுள் சிலவாகும்.

மேலும் யுத்தத்தின் போது ஏற்பட்ட அங்கவீனம் 50 வீதத்தினை விட குறைவான காரணத்தினால் 5/12 மற்றும் 20/22 வருட சேவைக்காலத்தினை பூர்த்திசெய்து மாதாந்த சம்பளமும் கொடுப்பனவுமின்றி ஓய்வு பெற்றுள்ள அல்லது விலகிச் சென்றுள்ள இராணுவத்தினரை மீண்டும் மருத்துவ சபையின் முன் நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கி 20 வீதத்திற்கும் அதிகமாக அங்கவீனமுற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளமும் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவ்வுறுப்பினர்களுக்கு ஓய்வு பெற்ற அல்லது விலகிச்சென்ற தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சம்பள நிலுவையினையும் கொடுப்பனவினையும் வழங்குவதற்கு 2017.01.05 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பள நிலுவைகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி ரூபா 6.3 மில்லியன்களாகும்.

யுத்தத்தின்போது அங்கவீனமடைந்த 10/12 வருடத்திலும் குறைந்த சேவைக்காலத்துடன் ஓய்வுபெற்ற அல்லது விலகிச்சென்ற உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதியக் கொடுப்பனவினை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 2014.12.17 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 2016.11.11 திகதி முதல் கொடுப்பனவுகளை வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவி மற்றும் அங்கவீனமுற்று மருத்துவ காரணங்களால் விலகிச் செல்லும் இராணுவ வீரர்கள் 55 வயதினைப் பூர்த்தியடைகையில் 85 சதவீதமாக திருத்தப்பட்டு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவை 100 வீதமாகும் வகையில் எஞ்சிய 15 சதவீதத்தை இராணுவ பாதுகாப்புக் கொடுப்பனவாக பயனாளி உயிரிழக்கும் வரை செலுத்தவும் 2017.01.01 ஆம் திகதி முதல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


2006.01.01 திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற முப்படையின் உறுப்பினர்களின் ஓய்வூதியம் 6/2016 (iv) சம்பள முறைமைக்கேற்ப திருத்தப்பட்டு 2015.07.01 முதல் செயற்படுத்தப்படும் வகையில் உயர் ஓய்வூதியக் கொடுப்பனவினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி/ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்