மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/25/2018 2:57:42 PM பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர் படையணியின் வருடாந்த ஹேர்மன் லூஸ் முகாமில் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர் படையணியின் வருடாந்த ஹேர்மன் லூஸ் முகாமில் கலந்து சிறப்பிப்பு

[2018/10/23]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று ( ஒக்டோபர், 23 ) இடம்பெற்ற தேசிய மாணவர் படையணியின் ஹேர்மன் லூஸ் முகாமில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் அவர்களை தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம் எம் எஸ் பெரேரா அவர்கள் வரவேற்றதுடன், மாணவர் சிப்பாய்கள் படையணியினரால் மரியாதையும் செலுத்தி வரவேற்கப்பட்டார்.

இவ்வருட 101 வது கணிப்பீட்டு முகாமில் பங்கேற்பதற்காக 55 பாடசாலைகளின் மாணவ சிப்பாய்கள் படையணிகள் மற்றும் இரண்டு பாடசாலைகளின் பேண்ட் வாத்திய குழுக்கள் உள்ளிட்ட சுமார் 575 உள்நாட்டு மாணவ சிப்பாய்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவ சிப்பாய்கள் படையணியின் 68 மாணவ சிப்பாய்கள் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்றுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற வைபவத்தின்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மாணவர் சிப்பாய்கள் கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் நன்மதிப்புள்ள, ஒழுக்கமான குடிமக்களாக அவர்களை மாற்றுவதில் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியினால் நூற்றாண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் அளப்பரியன எனவும், அதற்காக நாம் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியினால் ஒழுக்கம், பயிற்சி மற்றும் அர்பணிப்பு ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட யுத்த வீரர்களினால் மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தினை தோல்வியடையச்செய்ய முடிந்ததாகவும், இவர்கள் தமது பாடசாலை நாட்களில் ஏனைய துறைகளிலும் சிறபாக செயற்பட்டுள்ளனர். ஜனாதிபதி அவர்களும் தமது இளமைப்பருவத்தில் கெடட் படையணியில் இணைந்திருந்ததாக அவர் இங்கு ஞாபகப் படுத்தினார்.

மாணவர்களை மேலதிக பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வியினால் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

வருடாந்தம் சுமார் 125,000 மாணவர்கள் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்வதுடன், கனிஷ்ட மாணவ சிப்பாய்கள் படையணிகளுக்கான மாகாணமட்ட கணிப்பீட்டு முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின்கீழ் எனது எண்ணக்கருவில் ஆரம்பிக்கப்பட்டதாகும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் நாட்டில் மாணவ சிப்பாய்கள் படையணியை அபிவிருத்தி செய்வதுடன் அவற்றுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதில் விஷேட கவனம் செலுத்துவதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகைதந்த அனைத்து வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் மாணவ சிப்பாய்கள் ஆகியோருக்கு தமது நன்றியினை தெரிவித்தத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் நாடுகளுக்கிடையே கூட்டுறவையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும் என தெரிவித்த அவர், தனது உரையை நிறைவுசெய்யமுன்னர் எதிகால சவால்களை வெற்றிகரமாக முகம்கொடுக்கும் வகையில் ஏனைய பாடங்களில் கவனம் செலுத்துவதைப்போல் கெடட்டிங் துறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதாக மாணவர் படையணிகள் மத்தியில் வேண்டிக்கொண்டார்.

இங்கு இடம்பெற்ற நிகழ்வில், கண்டி பரி.சில்வர் ஸ்டார் கல்லூரியின் இராணுவ சிப்பாய்கள் படையணியினர் இவ்வாண்டின் அகில இலங்கை சிறந்த மாணவ சிப்பாய்களுக்கான “ஹேமன் லூஸ்” கிண்ணத்தினை பெற்றுக்கொண்டதுடன், இக்கல்லூரியின் கடற்படை சிப்பாய்கள் படையணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இதேவேளை, கந்தான டீ மசனோத் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வின் இறுதியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் மாணவ சிப்பாய்கள் பயிற்சி நிலையத்தில் புதிய கெடட் மெஸ் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, மாணவ சிப்பாய்கள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவச் சிப்பாய்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்