மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/3/2019 3:37:43 PM  வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு

 வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு

[2019/01/02]

வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் இலங்கை கடற்படையின் 23 வது தளபதியாக செவ்வாயன்று ( ஜனவரி, 01) பதவி ஏற்றார். நேற்றய தினம் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்கள் புதிய கடற்படைத் தளபதிக்கு சம்பிரதாய பூர்வமாக அட்மிரால் வாளினை கையளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டதுடன் 2019, ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 3-நட்சத்திர அந்தஸ்துள்ள வைஸ் அட்மிரல் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் இதற்கு முன்னர் கடற்படை பிரதம அதிகாரியாக பதவிவகித்தார்.

அம்பலங்கொட தர்மசோக கல்லூரியில் படிப்பை முடித்த வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் , 1984 ஆம் ஆண்டு 12 வது ஆட்சேர்ப்பின் பயிலுனர் அதிகாரியாக இலங்கை கடற்படையினுள் நுழைந்தார். அடிப்படை பயிற்சியை முடித்தபின், அவர் 1986 பிப்ரவரி மாதத்தில் துணை லெப்டினன்ட் ஆக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டார்.

வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், வர்த்தக நிர்வாகத்தின் மனித வள முகாமை கற்கை மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை ஆகியவற்றில் முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு பாடநெறியையும் பயின்றுள்ளார்.

மேலும் அவர், கடலடி வெடிபொருட்கள் கட்டுப்பாடு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய வற்றில்நிபுணத்துவம் மிக்க ஒரு படைவீரர் ஆகும்.

ஒரு சிறந்த விளையாட்டு வீரரான வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், இரண்டு தடவைகள் இலங்கை கடற்படையின் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவாகியுள்ளார், மேலும் அவர் பல சந்தர்ப்பங்களில் தெற்காசிய மற்றும் ஆசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தேசிய கூடைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

ஒரு கடற்படை அதிகாரியாக தாய் நாட்டிற்காக செவ்வனே சேவையாற்றியுள்ள வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், போர் கள முனை சிறப்பு செயலாற்றுகைக்காக இரண்டு முறை வீர விக்ரம விபுஷணய (WWV), ரண விக்ரம பதக்கம (RWP) மற்றும் ரண சூர பதக்கம (RSP) ஆகிய பதக்கங்களையும், முன்மாதிரியான நடவடிக்கைக்காக விசிஷ்ட சேவா விபுஷணய(VSV) மற்றும் உத்தம சேவா பதக்கம (USP) ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள், திருமதி அருந்ததி ஜெயநெத்தி அவர்களை திருமணம் செய்ததுடன் யஹான் மற்றும் துலின் எனும் இரு குழந்தைகளின் பாசமிகு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்