மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/1/2019 12:17:47 PM தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்

[2019/06/30]

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இதன் பிரதான மாநாடு நாளை (01) பிற்பகல் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும்.

ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவ்வாரத்தின் முதலாவது நாளான 24ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் ஜூன் 25ஆம் திகதி சமூக அமைப்புகளை மையமாகக்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களும் ஜூன் 26ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களும் ஜூன் 27ஆம் திகதி பாதுகாப்பு துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் ஜூன் 28ஆம் திகதி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களும் ஜூன் 29ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களும் இறுதி நாளான இன்று அரச சேவையிலுள்ள கள அதிகாரிகளை அறிவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களும் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், நடைபவனிகள், கருத்தரங்குகள், சித்திர மற்றும் சுவரொட்டி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இந்த அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் பெருமளவான மக்கள் பங்கேற்பை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து போதைப்பொருள் பாவனை பரவலடைவது குறித்து தேசிய ரீதியான ஆய்வறிக்கையொன்றை தயாரித்துள்ளதுடன், அவ்வறிக்கை நாளை இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் நேரடி தலையீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரையான காலப்பகுதியில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 14 மாவட்ட மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் 15,000 போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் தற்போது வெற்றிகரமாக நாட்டில் செயற்படுகின்றன. நாடளாவிய ரீதியில் 72,000 போதைப்பொருள் ஒழிப்பு தொழிநுட்ப உதவியாளர்களை கொண்ட அணியொன்று போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 6000க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 10,000க்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் நட்புறவு சமூகங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்பிற்கு முப்படை அதிகாரிகளின் வளப் பங்களிப்பு குறைவின்றி கிடைத்து வருகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக 1,695 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களின் அளவு 24,818 கிலோ 393 கிராம் 767 மில்லிகிராம் ஆகும்.

நன்றி: pmdnews.lk

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்