மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/9/2019 3:11:34 PM ஜனாதிபதி கம்போடியா பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி கம்போடியா பிரதமரை சந்தித்தார்

[2019/08/09]

அரசியல் மற்றும் வர்த்தகத் துறையுடன் தொடர்புடைய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

நேரடி விமான சேவைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம்

 

கம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது.

கம்போடிய பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான Peace Palaceஇல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கம்போடிய பிரதமர் ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தார்.

நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையே இருந்துவரும் சமய, கலாசார உறவுகளை நினைவுகூர்ந்த அந்நாட்டு பிரதமர் அந்த உறவை அடிப்படையாகக்கொண்டு இருநாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கிடையிலான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிவில் விமான சேவைகள் தொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய தொடர்புகள் காணப்பட்ட போதிலும் இதுவரையில் இரு நாடுகளிலும் தூதுவராலயங்கள் ஸ்தாபிக்கப்படாமையை கருத்திற்கொண்டு அவற்றை துரிதமாக அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு சந்தை வாய்ப்புக்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், முதலீட்டு பாதுகாப்புக்காக சட்டபூர்வமான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு நாடும் மற்றுமொரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாதென்பதே தனது வெளிநாட்டுக் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஆசியான் அமைப்பின் பிரதான உறுப்பு நாடாகிய கம்போடியாவுடன் இலங்கையின் நட்புறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளும் பிரிந்திருப்பது பாரிய நட்டம் என்பதும் தூதுவராலய தொடர்புகளை வலுவூட்டுவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதிகளவிலான கம்போடியா நாட்டின் பிக்குகள் இலங்கையில் கல்வி கற்று வருவதுடன், அதற்காக வழங்கப்பட்டுள்ள வசதிகளுக்காக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த கம்போடிய பிரதமர், சமய, கலாசார பின்புலத்தையுடைய இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பல்வேறு துறைகளினூடாக வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களையும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்போடிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

தலைவர்களினது சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான புதிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க கைச்சாத்திட்டதுடன், கம்போடியா சார்பாக கம்போடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கைச்சாத்திட்டார். இருநாடுகளுக்கிடையில் தேசிய கவுன்சில் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு வர்த்தக சபைகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

நன்றி: pmdnews.lk

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்