மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/20/2019 9:44:46 AM போர் கால கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு உயர் கௌரவ இராணுவ பட்டங்கள்

போர் கால கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு உயர் கௌரவ இராணுவ பட்டங்கள்

[2019/09/19]

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற கௌரவ பட்டங்கள் வழங்கி வைக்கும் விஷேட நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இன்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இவர்களுக்கான கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேற்படி இரு கௌரவ பதவிகளுக்காக சம்பிரதாய முறையில் பயன்படுத்தப்படும் விஷேட கோல்களையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஜனாதிபதி விஷேட மேடைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் கலர்படைத் தளபதியாக சேவையாற்றிய வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த பிலீட் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டமைக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேய குணவர்தன வாசித்தார் அதன் பின்னர் அட்மிரல் ஒப் த பிலீட் என்ற உயர் பதவிக்காக தயாரிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விஷேட கோலை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்ததார்.பின்னர், முன்னாள் விமானப் படைத் தளபதியாக சேவையாற்றிய எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டமைக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பும் வாசிக்கப்பட்டது அதன் பின்னர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற உயர் பதவிக்காக தயாரிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விஷேட கோலை ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

முன்னாள் அட்மிரல்(ஒய்வு) வசந்த கரன்னாகொட ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி எம்பிஏ எம்எஸ்சி என்டிசி பிஎஸ்சி அவர்கள் அட்மிரல் ஒப் த பிலீட் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட முதலாவது கடற்படைத் தளபதியாவார். மூன்று தசாப்த காலமாக எமது நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் 2009ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு போரின் இறுதி கட்டத்தின் போது கடற்படையின் தளபதியாக சேவையாற்றியமையை பாராட்டி கௌரவிக்கும் வகையிலேயே பாதுகாப்பு படையில் சேவையாற்றிய தளபதி ஒருவருக்கு வழங்கப்படும் அதி உயர் பதவியாகவே குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டது.

அட்மிரல் வசந்த கரன்னாகொட அவர்கள் 1971 ஆகஸ்ட் 01 ஆம் திகதி இலங்கை கடற்படையில் ஒரு பயிலுனர் அதிகாரியாகஇணைந்து கொண்டார். திருகோணமலை மற்றும் இந்திய கடற்படையில் உள்ள கடற்படை மற்றும் சமுரவிய அகாடமியில் தனது அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், பிப்ரவரி 01, 1974 அன்று துணை லெப்டிணன் ஆக நியமிக்கப்பட்டார்.

2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி இலங்கை கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றுகொண்ட அவர், கடற்படைக்கு பலவிதமான போர் தந்திரங்களை அறிமுகப்படுத்தினார். இதன் விளைவாக, கடற்புலிகளின் 08 மிதக்கும் ஆயுதங்களை கடலில் வைத்து கடற்படையினரால் வெற்றிகரமாக அழிக்க முடிந்தது. கடற்படையில் தயாரிக்கப்பட்ட அரோ படகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கடலில் கடற்படையின் வலிமையை அவர் அதிகரித்தார், இது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் புலி இருப்பை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. போரின் போது யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு படைவீரர்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்த ஜெட் லைனர் கப்பலும் அவரது தந்திரோபாய முடிவுகளில் ஒன்றாகும்.

2009 இல் மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர் அவர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். கடற்படை சேவையில் இருக்கும்போது மதிப்புமிக்க இந்த பதவியை வகித்த இலங்கை கடற்படையின் முதல் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ரொஷான் குணதிலக ஆர்.டபிள்யூ.பி & பார், வி.எஸ்.வி, யு.எஸ்.பி, என்.டி.சி, பி.எஸ்.சி அவர்கள் இலங்கை விமானப்படையின் முதல் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ஆவார். அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி பொதுக்கடமை விமானி பிரிவில் பயிலுனர் அதிகாரியாக இலங்கை விமானப்படையில் இணைந்தார். பறக்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், ஆகஸ்ட் 24, 1979 அன்று பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி, இலங்கை விமானப்படையின் 12 வது தளபதியாக பதவியேற்றார். விமானப்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் விமானப்படையின் தலைமை அதிகாரியாக கடமை புரிந்தார்.

தனது 28 ஆண்டுகால கீர்த்தி மிக்க விமானப்படை வாழ்க்கையில், அவர் பல கட்டளை, செயல்பாட்டு மற்றும் நிர்வாக நியமனங்கள் வகித்துள்ளார். நிலையான பிரிவு மற்றும் ரோட்டரி விங் விமானங்களில் அதிகளவு விமான இயக்க காலங்களை பதிவு செய்த அவர், ஒரு செயல்பாட்டு விமானியின் திறனில் 03வது கடல்சார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், 04வது ஹெலிகாப்டர் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். அத்துடன் அவர் கட்டுநாயக்க, அனுராதபுரம் மற்றும் சீனா குடா ஆகிய விமானப்படைத் தளந்களுக்கான கட்டளைத்தளபதியாகவும் விளங்கினார்.

அவர் 5வது விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஹாரி குணதிலக அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் வெற்றிகரமான முடிவோடு, அவர் எயார் மார்ஷல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார். மேலும் அவர், சேவைக்காலத்தின் போது எயார் சீப் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரே விமானப்படை தளபதி ஆவர்.

இந் நிகழ்வில் சமய தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜிகே நெம்மவத்த, முப்படை தளபதிகள், முப்படைகளின் முன்னாள் தளபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்