››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராஜாங்க அமைச்சரினால் பயனாளிகளுக்கான ‘விருசர’ வரப்பிரசாத அட்டை விநியோகிப்பு

இராஜாங்க அமைச்சரினால் பயனாளிகளுக்கான ‘விருசர’ வரப்பிரசாத அட்டை விநியோகிப்பு

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படைவீரர்கள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள், அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள “விருசர வரப்பிரசாத அட்டை” விநியோகிக்கும் இரண்டாவது கட்டத்தின் 2வது நிகழ்வு நேற்று (மார்ச்.01) குருணாகலை,போயகனேயிலுள்ள விஜயபாகு காலாற்படையணி நிலையத்தில் கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது ரெஜிமன்ட் மட்டத்திலும் சேவையின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்ப்பட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், அங்கவீனமுற்ற படைவீரர்கள் 893 பேருக்கு விருசர வரப்பிரசாத அட்டை விநியோகிக்கப்பட்டது. இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 687 பேரும், கடற்படையைச் சேர்ந்த 126 பேரும்,விமானப்படையைச் சேர்ந்த 39 பேரும்,பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 39 பேர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களின் சேவைகளை அங்கீகரித்து பாராட்டும் பொருட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்விஜேவர்தன அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்துடன் ரணவிரு சேவா அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட “விருசர வரப்பிரசாத அட்டையின் மூலம் இலங்கையில் முன்னிலை வகிக்கும் வர்த்தக நிலையங்கள், அரச மற்றும், தனியார் வங்கிகள், வைத்தியசாலைகள் போன்ற 45 நிறுவனங்கள் மூலம் நலன்புரி வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அட்டையை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் மருத்துவ வசதிகள், உணவு பொருட்கள், போக்குவரத்து வசதிகள், வங்கி கடன் கொடுக்கல் வாங்கல்கள், கற்கை நெறிகள் போன்ற பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் பல்வேறு வசதிகளும் பாரிய சேவை நலன்களையும் கழிவூகளையும் சேவை முன்னுரிமையையும் இந்த அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ.பி.ஜி கித்சிறி,ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன,விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்ஹள, இராணுவத்தின் பிரதிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சாமில் பெர்னான்டோ உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் முப்படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 3 இலட்சம் படைவீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் நன்மையடையவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஆறு கட்டங்களாக இத்திட்டம் நிறைவுபெறவுள்ளது.

     
     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்