››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ கெடட் அதிகாரிகளின் 89ஆவது பிரியாவிடை அணிவகுப்பு தியதலாவையில்

புதிய இராணுவ கெடட் அதிகாரிகள் தேசிய சேவையில் இணைகின்றனர்

[2016/06/19]

பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

தியதலாவை இராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் 89ஆவது பிரியாவிடை அணிவகுப்பு தியதலாவை இராணுவ முகாமில் நேற்று(ஜுன்.18) தியத்தலாவையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, தியத்தலாவை இராணுவ அகடமியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர். டபிள்யூ. டபிள்யூ ஏ டி பி ராஜகுரு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியதலாவை இராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 58 இராணுவ வீரர்கள் இராணுவ கெடட் அதிகாரிகளாக வெளியேறினர்.

இவர்களில் 81ஏ நிரந்தர ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 18 கெடட் அதிகாரிகளும் 56வது தொண்டர் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 29 கெடட் அதிகாரிகளும் 14வது நிரந்தர பெண் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 7 கெடட் அதிகாரிகளும் 13வது பெண் தொண்டர் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 4 கெடட் அதிகாரிகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 58 கெடட் அதிகாரிகளே இம்முறை பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

தியத்தலாவைக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அங்கு அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைபு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்த விஷேட மேடைக்கு வருகை தந்த அவர் பிரியாவிடை பெற்றுச் செல்லும் கெடட் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகப்பை பார்வையிட்டதுடன் அதனை ஏற்றுக் கொண்டார். வெளியேறும் அதிகாரிகளுக்க இராணுவ சம்பிரதாய முறைப்படி வாளையும் சிறந்த பெறுபேறுகளை காண்பித்த வீரர்களுக்க கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் விஷேட உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிடுகையில் :-

இலங்கையில் பௌதீக ரீதியாக பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் பயங்கரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லை.

எனவே, இந்தப் பயங்கரவாத சிந்தனை தொடர்பிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இராணுவம் உட்பட பாதுகாப்பு தரப்பு மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் :- இராணுவப் பயிற்சி என்றும் முடிவதில்லை. இன்று பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ அதிகாரிகளான நீங்கள் இனிதான் சமூகத்துக்குள் சென்று தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளீர்கள். நீங்கள் பல சவால்கள் நிறைந்த உலக சூழலுக்குள் இன்றிலிருந்து பிரவேசிக்கின்றீர்கள். இவ்வாறு இங்கிருந்து பயிற்சிகளை பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களாகிய நீங்கள் சுற்றுச்சூழல் அரசியல், சமூக, கலை, கலாசாரம் தொடர்பில் புரிதலை கொண்டிருக்கும் போதே பரிபூரணமாக சேவையை மக்களுக்கும் நாட்டுக்கும் வழங்கமுடியும்.

அண்மைகாலமாக முப்படை பொலிஸ் போன்ற பாதுகாப்பு தரப்புகள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு இராணுவம் உட்பட பாதுகாப்புதரப்பு மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை ஊடாக வழங்கிய சேவையை எக்காலத்திலும் மறக்கமுடியாது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாகவே இன்று சமாதானமும் அமைதியான சூழலும் நாட்டில் நிலவுகின்றது. அவ்வாறு பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவ வீரர்களாகிய உங்களையும் சார்ந்தது.

பௌதீக ரீதியாக தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் தீவிரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லை. ஆகவே, பாதுகாப்பு தரப்பினராகிய நாம் மிகவும் அவதானத்துடன் இருந்து இந்நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும். இராணுவ அதிகாரிகள் தொடர்பில் இன்று பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இராணுவ அதிகாரிகளிடம் நேர்மையானதும், ஒழுக்கமானதுமான சேவையினை எதிர்ப்பார்க்கின்றோம் அத்தோடு, அனைத்து பாதுகாப்பு தரப்புகள் ஒழுக்ககோவைகளுக்கு புறம்பாக செயற்படாமல் இராணுவத்தின் கௌரவத்தையும், நாட்டின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு படையினர் படை நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவதல்ல மாறாக தேசத்தை கட்டியெழுப்புவதிலும் தமது பங்களிப்புக்களை செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் எமது படைவீரர்கள் சிறந்த சேவைகளை வழங்கிவருகின்றனர். பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் உங்களது சேவைகளை பாராட்டுகின்றேன். அனர்த்தங்களின் போது படையினர் மேற்கொண்ட மீட்பு, நிவாரண பணிகள் பாராட்டுக்குறியது என்றார்.

தியத்தலாவை இராணுவ அகடமியில் பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் எண்ணிக்கை இம்முறையுடன் பத்தாயிரத்தை அடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமையை நான் சிறந்த வாய்ப்பாக கருதுகின்றேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வெவ்வேறு ஆட்சேர்ப்பைச் சேர்ந்த சிறந்த சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், சம்பிரதாய ரீதியாக புதிதாக தேசிய சேவையில் இணைந்து கொண்ட அதிகாரிகளின் பெற்றோர்கள் அவர்களுக்கான ஜனாதிபதியின் ஆணையதிகாரத்தினை அணிவித்து வைத்தனர். அத்துடன் கெடட் அதிகாரிகளினால் இராணுவத் தளபதியின் முன்னிலையில் கேணல் பஸ்லி லாபிர் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் வைத்து இறுதி காட்சியளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தியத்தலாவை இராணுவ அகடமியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர். டபிள்யூ. டபிள்யூ ஏ டி பி ராஜகுரு, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் பெற்றோர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்