››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்பு வாரம் நாளை ஆரம்பம்………..

பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்பு வாரம் நாளை ஆரம்பம்

[2016/10/24]

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை செயற்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்பு வாரம் நாளை (24) தொடக்கம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 30ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் இந்த வாரத்தில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பயன்பாடுத்தி அகற்றப்படும் பிளாஸ்ரிக், பொலித்தீன், மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மாவட்ட மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்கலாம்.

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் போன்றவை மண்ணுடன் கலந்தால் அவை நீண்டகாலத்துக்கு உக்கிப் போகாதிருக்கும். அதனால் மண்வளம் குன்றுவதுடன், நிலத்தடி நீரும் மாசடையும்.

யானைக்கால், டெங்கு போன்ற நுளம்பினால் பரவும் நோய்கள் பரவுவதற்கு ஆங்காங்கே அகற்றப்படும் பிளாஸ்ரிக் காரணமாக இருக்கிறது. பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவற்றுக்கு தீ வைப்பதனால் ஏற்படும் வளி மாசடைதலினால் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களுக்கும் மக்கள் ஆட்படுகின்றனர்.

பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளால் வடிகால் கட்டமைப்புக்கள் தடைப்பட்டு திடீர் வெள்ள அனர்த்தங்களும் ஏற்படலாம்.
ஆயுட்காலம் முடிவடைந்து அகற்றப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் இலத்திரனியல் கழிவுகள் ஆகும். இவற்றில் கணனிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கையடக்கத் தொலைபேசிகள், கணிப்பொறிகள், ஒலிப்பதிவு கருவிகள், நிழற்பட இயந்திரங்கள், இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்கள், பெக்ஸ் கருவிகள் போன்றவை அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் இலத்திரனியல் உபகரணப் பயன்பாடு துரிதமாக அதிகரித்துள்ளது. அவற்றின் ஆயுட்காலமும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவருகிறது.

அனைத்து இலத்திரனியல் உதிரிப்பாகங்களிலும் பல்வேறு விதமான நச்சு இரசாயணங்கள் அடங்கியிருப்பதனால் இலத்திரனியல் கழிவுகள் முறையற்ற வகையில் சூழலில் அகற்றப்படுவதனால் மக்களின் சுகாதாரத்துக்கும் சுற்றாடலுக்கும் ஏனைய உயிரினங்களின் இருப்புக்கும் அது பெரும் அச்சுறுத்தலாகும்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்