››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்…

தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்…

[2016/12/23]

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்த ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசத்தின் கீர்த்திமிக்க வரலாற்றினதும் பண்பாட்டினதும் சாட்சிகளாக இருப்பது தொல்பொருள்களும் அரும்பொருள்களுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை அழிவடைவது நாட்டின் வரலாறும் பண்பாடும் அழிவடைவதைப் போன்றது என்றும் தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 219 வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (23) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வீட்டுரிமைப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வுடன் இணைந்ததாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் சேவையாற்றும் ஊழியர்களின் 31845 பிள்ளைகளுக்கு 11 மில்லியன் ரூபா பெறுமதியான அப்பியாசப் புத்தகங்களை வழங்குதல், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த 123 பிள்ளைகளுக்கு 15 ஆயிரம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் உதவிகள், க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த 54 பேருக்கு 40 ஆயிரம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் உதவிகள், பல்கலைக்கழக நுழைவைப் பெற்றுள்ள 74 பேருக்கு மடிக் கனணிகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

முப்படைகளைப் போன்றே சிவில் பாதுகாப்புப் படையணியும் யுத்த காலத்தின் போது உயிர்த் தியாகங்களை செய்து நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அவர்கள் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொண்டுவரும் பணிகளைப் பாராட்டினார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் நலன்பேணலுக்காக அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படைகளின் தளபதிகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பள்ளேகம, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி லக்ஷ்மி பள்ளேகம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

     

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்