››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நூறாவது ஹேர்மன் லூஸ் முகாமில் பங்கேற்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நூறாவது ஹேர்மன் லூஸ் முகாமில் பங்கேற்பு

[2017/10/19]

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று ( ஒக்டோபர்,19 ) இடம்பெற்ற தேசிய மாணவர் படையணியின் நூறாவது ஹேர்மன் லூஸ் முகாமில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இந் நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஏகேபி விக்ரமசிங்க அவர்கள் வரவேற்றார்.

இங்கு இடம்பெற்ற வைபவத்தின்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், நாட்டின் நலனுக்காக மாணவ சிப்பாய்களுக்க வழங்கப்படும் விஷேட பயிற்சிகள் அவர்களின் எதிர்கால வாழ்வினை புடம்போடுவதுடன் நாட்டின் எதிர்காலத்தினையும் வடிவமைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது எனவும் இதற்காக தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியினால் ஆற்றப்படும் பணிகள் அளப்பரியன என அவர் பாராட்டினார். பாடசாலைகளில் மாணவர் சிப்பாய்கள் உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் ஈடுபாடு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், 35 வருடங்களின் பின்னர் கௌரவ பிரதமர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக மாணவர் படையணியுடன் தொடர்புடைய அமைச்சர் என்ற வகையில் கனிஷ்ட மாணவ சிப்பாய்கள் படையணியை மீள உருவாக்கியதாகவும் இதனால் அது அனைத்து பாடசாலைகளிலும் மாணவர் படையணிகளை அபிவிருத்தி செய்வதற்கு வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியினால் உருவாக்கப்பட்ட ஒழுக்கம், பயிற்சி மற்றும் அர்பணிப்பு ஆகியவற்றுடன் கூடிய படைத்தளபதிகள் மற்றும் யுத்த வீரர்களின் மூலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தினை தோல்வியடையச் செய்ய முடிந்ததாக தெரிவித்த அவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் நாட்டில் மாணவ சிப்பாய்கள் படையணியை அபிவிருத்தி செய்வதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளது எனவும் நாட்டிலுள்ள ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் முன்மாதிரி குடிமக்களாக அவர்களை மாற்றுவதற்காக இணைப் பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் கவனத்திற்கு கொண்டுவந்தார். ஹேர்மன் லூஸ் முகாமின் நூற்றாண்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த அனைத்து வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் மாணவ சிப்பாய்கள் ஆகியோருக்கு தமது நன்றியினையும் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வெற்றி பெற்ற பாடசாலை படைப்பிரிவுகளுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இவ்வருடத்திற்கான ஹேர்மன் லூஸ் கிண்ணத்தை கந்தானை டீ மசநொட் கல்லூரி சுவீகரித்த அதேவேளை கொழும்பு நாலந்தா கல்லூரி இரண்டாம் இடத்தினையும், இப்பகமுவ மத்திய கல்லூரி மூராம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மாணவச் சிப்பாய்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான இவ்வருடாந்த கணிப்பீட்டு முகாமில் பங்கேற்பதற்காக 54 பாடசாலைகளின் மாணவ சிப்பாய்கள் படையணிகள் தகுதிபெற்றிருந்தன. அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ சிப்பாய்கள் படையணியின் 75 அதிகாரிகள் மற்றும் மாணவச் சிப்பாய்களும் இம்முகாமில் பங்கேற்றிருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் மத தலைவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாணவ சிப்பாய்கள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவச் சிப்பாய்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1881ஆம் ஆண்டு றோயல் கல்லூரியில் தொண்டர் படையணியாக ஆரம்பித்த தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி இன்று 29 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் பட்டாலியன்கள் அடங்கலாக 38 பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. 1917ஆம் ஆண்டில் திரு. ஹேர்மன் லூஸ் எனும் சிரேஷ்ட நீதிபதியினால் இலங்கை மாணவ சிப்பாய்கள் பட்டாலியனுக்கு வெற்றிக்கிண்ணம் ஒன்று பரிசளிக்கப்பட்டது. அன்று முதல் இந் நிகழ்வு அவரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. 1917ஆண்டு முதற்தடவையாக இடம்பெற்ற போட்டி நிகழ்வில் கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரி இக்கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்