››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய பிரதமர் மற்றும் ஐ நா சூழல் நிகழ்ச்சித் திட்ட தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு.


இந்திய பிரதமர் மற்றும் ஐ நா சூழல் நிகழ்ச்சித் திட்ட தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு.

[2018/03/12]

இந்தியாவின் புதுடில்லியில் இன்று (11) ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ராஸ்திரபதி பவனில் இடம்பெற்றது.

சூரியசக்தி மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதியின் பங்குபற்றுதலை பெரும் கௌரவமாக கருதுவதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், சர்வதேச சூரியசக்தி மாநாட்டின் செய்தியை முழு உலகிற்கும் எடுத்துச் செல்வதற்கு இணைந்து செயற்பட உதவுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றிருப்பதை நினைவுகூர்ந்த இந்திய பிரதமர், எதிர்காலத்திலும் இந்த உறவை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இரு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெயிம் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

இலங்கையில் 28 வீதம் குறைவடைந்துள்ள வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், காடுகளின் பாதுகாப்பிற்காக விமானப்படை விசேட கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது தொடர்பான அறிக்கை தனக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடல் மாசடைதல் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

நிர்மாண நடவடிக்கைகளுக்காக அதிகளவில் மணல் மற்றும் மண் அகழ்வதன் காரணமாக ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இதற்காக தொழில்நுட்ப மாற்றீடுகள் மற்றும் முன்மொழிவுகளை எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்துமாறு எரிக் சொல்ஹெயிமிடம் கேட்டுக்கொண்டார்.

நோர்வே அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார்.

சுற்றாடல் பாதுகாப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எரிக் சொல்ஹெயிம் ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்