››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பான் சக்கரவர்த்தியுடன் ஜனாதிபதி சந்திப்பு

[2018/03/12]

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜப்பானுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தி அகிஹிதோ அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தியும் மிச்சிகோ மகாராணியாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன் பின்னர் இரு தலைவர்களும் சுமுகமாக கலந்துரையாடினர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வருகை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட ஜப்பான் சக்கரவர்த்தி, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் பலமான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டுக்கான அரசமுறை பயணத்திற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் சக்கரவர்த்திக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்துவகையிலும் பலப்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

1981 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து நினைவுகூர்ந்த ஜப்பான் சக்கரவர்த்தி, அவ்விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்ததாக தெரிவித்தார்.

அவ்விஜயத்தின்போது இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய பெருவரவேற்பு குறித்தும் ஜப்பான் சக்கரவர்த்தி கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார்.

ஜப்பான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் உண்மையான நண்பன் என்றவகையில் இலங்கை ஜப்பானுக்கு வழங்கிய ஒத்துழைப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜப்பான் சக்கரவர்த்தி, இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் ஜப்பான் சக்கரவர்த்தியுடன் இணைந்து இம்பீரியல் மாளிகையை பார்வையிட்டார்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்