››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உலக சுகாதார தின விழா ஜனாதிபதி தலைமையில்

உலக சுகாதார தின விழா ஜனாதிபதி தலைமையில்

[2018/04/08]

உலக சுகாதார தாபனத்தின் 70வது உலக சுகாதார தின அனுஷ்டிப்பு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (07) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக சுகாதார தாபனத்தின் முக்கிய நோக்கம் உலக மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதாகும். பல தசாப்தங்களாக உலக சுகாதாரத் தாபனம் ஏனைய பங்காளர்கள் மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக தாய் சேய் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்தல் ஆகிய பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது.

உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி உலக சுகாதார தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் இவ்வருட சர்வதேச சுகாதார தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவதானது சர்வதேச ரீதியாக நாட்டுக்குக் கிடைத்த பெருமையாகும். உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் 12 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார தாபனத்தின் 70வது உலக சுகாதார தினம் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டதன் அடையாளமாக முதல் நாள் நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், தபால் மா அதிபர் ரோஹன அபேவர்த்தனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஈ.ஹெல்த் அட்டை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தேசிய சுகாதார தொலைக்காட்சி அலைவரிசையான Life TV அலைவரிசையையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Dr Tedros Adhanom Ghebreyesus உலக சுகாதார தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பணிப்பாளர் பூனம் செட்ரபால் சிங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் உலக சுகாதார தாபனத்தின் 70வது சுகாதார தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்Dr Tedros Adhanom Ghebreyesus உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் விசேட இராப்போசன விருந்து நேற்று இரவு கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்